கொசு
கொசு புதைப்படிவ காலம்: சுராசிக் காலம் – Recent | |
---|---|
பெண் க்யூலிசெடா லாஞ்சியாரெயோலேடா | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: |
|
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
துணைவரிசை: | நெமடொசிரா
|
உள்வரிசை: | |
பெருங்குடும்பம்: | |
குடும்பம்: | குளுசிடே ஜெ. டபுள்யு மெய்கன், 1818 [1]
|
துணைக்குடும்பம் | |
| |
உயிரியற் பல்வகைமை | |
[[List of mosquito genera|43 பேரினங்கள்]] |
கொசு (ஈழத்தமிழ்: நுளம்பு), குளுசிடே (Culicidae) குடும்பத்தை சேர்ந்த ஒரு பூச்சியினமாகும். மெல்லிய உடல் கொண்ட கொசுக்கள் ஓர் இணை இறக்கைகளையும் மூன்று இணை நீண்ட கால்களையும் கொண்டன. பொதுவாக ஆண் கொசுக்கள் தாவரச் சாற்றைப் பருகும். பெண் கொசுக்களே மனிதர்களிடமிருந்தும் பிற உயிரினங்களிலிருந்தும் இரத்தத்தை உறிஞ்சும் என்றாலும் பெண் கொசுக்களுக்குக்கூட இரத்தம் முதன்மையான உணவல்ல.
ஆணுடன் கூடிக் கலவியில் ஈடுபட்ட பிறகு, முட்டைகளை உருவாக்கத் தேவைப்படும் புரதங்களைப் பெறுவதற்காகவே பெண் கொசு இரத்தத்தைக் குடிக்கிறது. ஒரு பெண் கொசு வயிறு நிரம்ப இரத்தத்தைக் குடித்துவிட்டால், அதன் சந்ததிகளின் 25 தலைமுறைகளுக்குத் தேவையான புரதம் கிடைத்துவிடுகிறது.[2] வீடுகளிலுள்ள கொசுக்கள் தாம் பிறந்த இடத்திலிருந்து சுமார் ஆயிரம் அடி தொலைவுக்குள்ளேயே நடமாடும். அதற்காக அவை மனிதர்கள் மற்றும் கால்நடைகள் வாழ்கிற இடங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நீரில் மட்டுமே முட்டையிட்டு இனப் பெருக்கம் செய்யும்.
கொசுக்களில் உப்பு நீரில் இனப்பெருக்கம் செய்கிற ஒரு வகை, கடற்கரை ஓரமுள்ள நீர்நிலைகளில் வசிக்கும். அவை மனிதர்களையும் விலங்குகளையும் தேடி 50 முதல் 75 மைல் தொலைவுக்குக்கூடப் பயணம் செய்ய வல்லன. ஆண் கொசுக்கள் ஏறக்குறைய ஒரு வாரமே வாழுக்கூடியன. ஆண் கொசுக்கள் முட்டையிலிருந்து வாழ்க்கைசுழற்சியின் மூலம் மூதுயிரியாக வெளிப்பட்டவுடனேயே பெண் கொசுக்களுடன் உறவு கொள்கின்றன. கலவி முடிந்ததும் ஏதாவது ஒரு செடியின் இலையில் அமர்ந்து சாற்றைக் குடித்துக்கொண்டு காலம் கழிக்கிறது. பெண் கொசு அதிகபட்சமாக ஒரு மாதமே உயிருடன் இருக்கும். அதற்குள் அது கருத்தரித்து ஏதாவது ஒரு நீர்நிலையில் முட்டையிட்டுவிட வேண்டும். ஒரு சமயத்தில், சராசரியாக நூறு முட்டைகளை இடும். இந்த வேகத்தில் இனத்தைப் பெருக்குவதால்தான் ஆறே தலைமுறையில் அதன் சந்ததிகளின் எண்ணிக்கை 3,100 கோடியை எட்டிவிடுகிறது.[2]
கொசு/நுளம்பு மனிதக் குருதியை நுண்ணிய ஊசி போன்ற வாயுறுப்பால் அகத்துறிஞ்சி தனது வயிறு அல்லது கண்டப்பைக்குள் செலுத்தும். கண்டப்பைக்குள் செலுத்தப்பட்ட குருதி, சில நொதியங்கள் சேர்க்கப்பட்டு நுளம்புக்கான உணவாக கண்டப்பையுள் சேகரிக்கப்படும். அதேவேளை மனித உடலில் இருந்து கொசு/நுளம்பு குருதியை அகத்துறிஞ்சும் போது தனது உமிழ் நீரை இரத்தத்தினை உறிஞ்சும் இடத்தில் பாய்ச்சும். இதனால் இதன் நுண்ணிய குழலுக்குள் குருதி செல்ல ஏதுவாக குருதியின் அடர்த்தி குறைவதோடு, குருதி உறைதலும் தடுக்கப்படுகிறது.
கொசு இனங்களில் அனோஃபிலசு (Anopheles) எனப்படும் கொசு இனத்தின் பெண் கொசுக்களே, உலகின் சில பாகங்களில் மனித இறப்பை ஏற்படுத்தும், மலேரியா என்னும் கொடிய தொற்றுநோயை ஒருவரிலிருந்து இன்னொருவருக்கு கடத்தும் நோய்க்காவியாக இருக்கின்றன.
கூர்ப்பு மற்றும் வகைப்பாட்டியல்
[தொகு]கொசு இனம் மிகப்பழமையானதொரு உயிரினமாகும். இதன் நவீன இனங்கள் பண்டைய கிரெடேசியஸ் யுகத்திலிருந்து (சுமார் 79 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்) கண்டெடுக்கப்பட்ட மரப்பிசின் படிமங்களிலுள்ள (நிமிளையிலுள்ள) கொசுக்களின் உடற்கூறமைப்பை ஒத்துள்ளன. [3] மேலும் பர்மாவில் கண்டறியப்பட்ட படிம நிமிளையில் 90 முதல் 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய வாழ் கொசுச் சிற்றினம் மாறுபட்ட சில சிறப்புக்கூறுகளைப் பெற்றிருந்தன. [4]
சுமார் 46 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்த இருவேறு கொசுக்களின் படிமங்கள் தற்காலத்திலிருந்து சற்றே மாறுபட்ட புற உடலமைப்பைப் பெற்றிருந்தன. [5] மேலும் இவற்றின் வயிற்றுப்பகுதியில் மிகப்பழமையான இரத்தம் சேமித்து வைக்கப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டது.[6][7] சமீபத்திய ஆய்வுகள், கிரெடேசியஸ் யுகத்திற்கு முந்தைய கண்டுபிடிப்புகள் இல்லாத போதிலும், சுமார் 226 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கொசுவினங்கள் அனாஃபிலினே, க்யூலிசினே போன்ற துணைக்குடும்பங்களுக்கு வழிவகுக்கும் மரபுவழிகளாக இருந்திருக்கக்கூடும் எனத் தெரிவிக்கின்றன.[8] சுமார் 95 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்து பழைய மற்றும் புதிய அனாஃபிலஸ் இனங்கள் பரிணாம மாற்றம் அடைந்துள்ளதாக நம்பப்படுகிறது.
அனாஃபிலஸ் காம்பியா சிற்றினம் மேலும் M(opti) மற்றும் S(avanah) என மூலக்கூறு நுண்வகைப்பாட்டில் வகைப்படுத்தப்படுகிறது. [9] ஏனெனில், M(opti) வகை இனத்தில் வேலை செய்யும் சில பூச்சிக்கொல்லிகள் S(avanah) வகை இனத்தில் வேலை செய்வதில்லை. [10] சுமார் 3,500 க்கும் மேற்பட்ட இனங்கள் க்யூலிசிடேவில் ஏற்கனவே வகைப்படுத்தப்பட்டுள்ளன.[11] அவை பொதுவாக இரண்டு துணைக் குடும்பங்ளாகப் பிரிக்கப்பட்டு, மேலும் 43 பேரினங்களாக வகைப்படுத்தப் படுகின்றன. இந்த வகைகள் மேலும் டி.என்.ஏ (மரபணு) ஆய்வுகளினால் இதன் வரிசை நிலைகளில் தொடர்ச்சியான மாற்றத்திற்கு உள்ளாகின்றன.
அனாஃபிலினே, க்யூலிசினே ஆகிய இரண்டு பிரதான துணைக்குடும்பங்களும் மேலும் பல உட்பிரிவுகளைக் கொண்டுள்ளன. அது மட்டுமல்லாது நோயைப்பரப்பும் நோய்க்காரணிகளைக் கொண்டும் இவை வகைப்படுத்தப்படுகின்றன. சான்றாக, மஞ்சள் காய்ச்சல், டெங்கு காய்ச்சல், போன்ற தொற்று நோய்கள் க்யூலிசினே கொசு வகைகளால் பரவுகின்றன. மலேரியா, யானைக்கால் நோயான ஃபைலேரியா, போன்றவற்றை அனாஃபிலின் கொசுக்கள் பரப்புகின்றன.
துணைக்குடும்பங்கள்
[தொகு]பேரினம்
[தொகு]- ஏடியோமையா (Aedeomyia)
- ஏடிஸ் (Aedes)
- அனாஃபிலஸ் (Anopheles)
- ஆர்மிஜெர்ஸ் (Armigeres)
- அயுராகிஸியா (Ayurakitia)
- போராகின்டா (Borachinda)
- கோகுய்லெட்டிடியா (Coquillettidia)
- க்யூலெக்ஸ் (Culex)
- க்யூலிசெடா (Culiseta)
- டெய்னோசெரிட்ஸ் (Deinocerites)
- எரிட்மாபோடைட்ஸ் (Eretmapodites)
- ஃபிகால்பியா(Ficalbia)
- காலின்டோமியா (Galindomyia)
- ஹீமாகோகஸ் (Haemagogus)
- ஹெஸ்மேனியா (Heizmannia)
- ஹோட்ஜெசியா (Hodgesia)
- ஐசோடொமியா (Isostomyia)
- ஜான்பெல்கினியா (Johnbelkinia)
- கிமியா (Kimia)
- லிமாடஸ் (Limatus)
- லட்சியா (Lutzia)
- மலாயா (Malaya)
- மன்சோனியா (Mansonia)
- மாரிகோல்டியா (Maorigoeldia)
- மைமொமியா (Mimomyia)
- ஒனிரியான் (Onirion)
- ஒபிஃபெக்ஸ் (Opifex)
- ஆர்த்தோபோடோமியா (Orthopodomyia)
- ஸொரோபோரா (Psorophora)
- ரன்கோமியா (Runchomyia)
- சபிதஸ் (Sabethes)
- சன்னோனியானா (Shannoniana)
- டோபொமியா (Topomyia)
- டொக்சோரைன்சிட்ஸ் (Toxorhynchites)
- ட்ரைகொப்ரொசோபோன் (Trichoprosopon)
- ட்ரைப்டிரியோட்ஸ் (Tripteroides)
- உதயா (Udaya)
- யுரனோசீனியா (Uranotaenia)
- வெர்ரலினா (Verrallina)
- வையோமியா (Wyeomyia)
சிற்றினம்
[தொகு]உலகெங்கிலும் சுமார் 3500 சிற்றினங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. சில நோய்க்காரணிகளை கடத்துபவையாகவும், சில மனித இனத்தைத் துன்புறுத்தாமல் விலங்குகளில் மட்டும் நோய் பரப்புவனவாகவும் இருக்கின்றன. பெரும்பாலான சிற்றினங்களில் இரத்தமுறிஞ்சும் கொசுக்கள் பெண் கொசுக்களாகும்.
சில சிற்றினங்கள் நோயைப் பரப்பும் நோய்பரப்பிகளாக இருக்கின்றன. சில வீட்டில் உள்ளோரிடம் நோயைப்பரப்புவனவாகவும், சில காட்டில் நடமாடுபவர்களிடம் நோயைப்பரப்புவனவாகவும் இருகூறுகளாக உள்ளன.
இனப்பெருக்கம்
[தொகு]கொசுக்கள் பாலினப்பெருக்கத்தை மேற்கொள்கின்றன. இவை ஆண், பெண் என இரு பால் பிரிவுகளைக் கொண்டவை. ஆண் கொசுவினால் உற்பத்தி செய்யப்படும் 20-ஹைட்ராக்ஸிக்ஸிஸோன் (20-E) எனும் ஸ்டீராய்டு இயக்குநீர், புணர்தலின் போது பெண்கொசுவினுள் புணர்புழை வழியாக உட்செலுத்தப்படுகிறது. இந்த இயக்கு நீர் பெண் கொசுவிற்கு, இரத்தமுட்கொண்ட பிறகான முட்டை உற்பத்தி, முட்டையிடும் திறன், கருவுறுதிறன், மறுமுறை இனப்பெருக்கத்திற்கான உயர்வெப்பம் தாங்கும் தன்மை போன்ற வியத்தகு விளைவுகளை வழங்குகிறது.[12]
வாழ்க்கைச் சுழற்சி
[தொகு]கொசுக்களின் வாழ்க்கைச்சுழற்சி நான்கு முக்கியப் பருவங்களைக் கொண்டுள்ளது. அவை முட்டை, குடம்பி (லார்வாப் புழு) (அ) இளவுயிரி, கூட்டுப்புழு, மூதுயிரி ஆகும். இவற்றின் உருமாற்ற நிலைகள் பொதுவாக சுற்றுச்சூழலின் வெப்பநிலை, சிற்றினத்தைப் பொருத்து வேறுபடும். 4-30 நாட்கள் வரையிலாக இதன் பருவ உருமாற்றம் நிகழ்கிறது. இதன் தேவையான வெப்பநிலை 60°F முதல் 80°F ஆகும்.
முட்டையிடல்
[தொகு]பெண்கொசுக்கள் மனிதரிடம் இரத்ததை உறிஞ்சியவுடன் முட்டையிடத் தேவையான புரதத்தைப் பெற்றுக்கொள்கின்றன. பின்னர் இவை தேங்கியுள்ள நீர் நிலைகளில் முட்டையிடுகின்றன. அனாஃபிலிஸ், ஏடிஸ், ஆக்லரோடாட்டஸ் முட்டைகள் ஒவ்வொன்றாக இடப்படுகின்றன. இவை ஒன்றிணைவதில்லை. ஆனால் க்யூலிசிடே, க்யூலெக்ஸ் போன்ற கொசுக்களின் முட்டைகள் சுமார் 100-200 எண்ணிக்கையில் இருக்கும். இவை இணைந்து தெப்பம் போல நீரின் மேற்புறத்தில் மிதக்கின்றன. ஏடிஸ், ஆக்லரோடாட்டஸ் போன்ற இனங்கள் ஈரமான இடங்களில் முட்டையிடுகின்றன. சாதகமான சூழலில் இவை நீரில் சென்று பொறிக்கப் படுகின்றன. பெரும்பாலான கொசு முட்டைகள் 48 மணி நேரத்திற்குள் பொறிக்கப்பட்டு குடம்பியாகின்றன.
குடம்பி
[தொகு]முட்டையிலிருந்து பொறிக்கப்படும் குடம்பி (அ) லார்வா புழுக்கள் பருத்த தலையுடனும், உணவுண்ணப் பயன்படும் வாய்த்தூரிகைகளுடனும், பரந்த மார்புப்பகுதியையும் பெற்றுள்ளன. இவை கால்களற்று, உடற்கண்டங்களைக் கொண்ட வயிற்றுப்பகுதியையும் பெற்றுள்ளன.
இவை ஸ்பைராக்கல் எனப்படும் வயிற்றின் எட்டாவது உடற்கண்டத்திலுள்ள சுவாசத்துவாரங்கள் வழி சுவாசிக்கின்றன. அடிக்கடி நீரின் புறப்பரப்பிற்கு நகர்ந்து சுவாசத்தை மேற்கொள்கின்றன. மேலும் புறப்பரப்பிலுள்ள பாக்டீரியா, பாசிகள், மற்றும் பிற நுண்ணுயிரிகளை ஊட்டமாகக் உட்கொள்கின்றன.
சைஃபோன் குழாய்களை நீரின் புறப்பரப்பில் மிதக்க வைத்து தலைகீழாக நீரில் மிதந்து அதன் மூலம் சுவாசிக்கின்றன. ஆனால் அனாஃபிலஸ் இனத்தில் சைஃபோன் குழாய்கள் இல்லாததால் நீரின் புறப்பரப்பில் மிதந்து சுவாசிக்கின்றன.
நான்கு முறை தோலுரித்தல் மாற்றம் நிகழ்கின்றது. ஒவ்வொரு முறையும் உருவ அளவில் பெரிதாகின்றன. நான்காவதுமுறை தோலுரித்தலின் பிறகு கூட்டுப்புழுவாக மாற்றமடைகின்றன.
கூட்டுப்புழு
[தொகு]கூட்டுப்புழு பருவத்தில் அவை ஊட்டமில்லாமல் ஓய்வு நிலையில் இருக்கின்றன. இவை ஒளிநிலைகளால் வாலினைக் கொண்டு இடம்பெயர்கின்றன. இக்கூட்டுபுழுக்கள் வண்ணத்துப்பூச்சிகளில் உள்ள பருவநிலையைப் போன்று மூதுயிரியாக மாற்றமடைகின்றன.
மூதுயிரி
[தொகு]கூட்டுபுழுவிலிருந்து வெளிவரும் மூதுயிரி நீரின் புறப்பரப்பில் நின்று, ஈரத்தை உலர்த்துகிறது. பின்னர் பறப்பதற்கு ஏதுவாக அதன் இறக்கைகள் நன்கு உலர்த்தப்படுகின்றன. இவைகள் மூதுயிரியாக மாற்றம் பெற்ற இரு நாட்களுக்கு உணவு உட்கொள்ளுதலும், இனப்பெருக்கமும் பெரும்பாலும் மேற்கொள்கிறது.
உணவூட்டம்
[தொகு]தாவரச் சாற்றைப் பெரும்பாலும் உட்கொள்கின்றன. பெண் கொசுக்கள் முட்டையிடும் திறனின் புரதத்தேவைக்காக இரத்ததை மனித, விலங்குகளின் தோற்பகுதியிலிருந்து உறிஞ்சுகின்றன. மனிதனின் மூச்சுக்காற்றில் இருந்தும் வியர்வையில் இருந்தும் வெளிவரும் ஆக்டெனால் என்னும் வேதிப்பொருளின் மூலமாக கொசுக்கள் மனிதர்கள் இருக்கும் இடத்தை அறிந்து கடிக்க வருகின்றன.
பரவல்
[தொகு]பரவும் முறைகள்
[தொகு]- தேங்கிய நீர்நிலைகள்
- வடியாத மழைநீர்
- திறந்த வெளி சாக்கடைகள்
- மூடப்படாத, நீர் இருக்கும் பாத்திரங்கள் முதலியவை
- தெருக் குப்பைத் தொட்டிகள்
நோய்களைப் பரப்பும் கடத்திகள் & பரப்பும் நோய்கள்
[தொகு]- மலேரியா (Malaria) – அனாஃபிலஸ் காம்பியே (Anopheles gambiae) எனும் வகையைச் சேர்ந்த பெண் நுளம்பால் பரப்பப்படும்
- சிக்குன்குனியா (chicken kuniya) – ஏடிஸ் எகிப்தீ (Aedes aegypti) அல்லது ஏடிஸ் அல்போபிக்டஸ் (Aedes Albopictus) (புலிக்கொசு) எனும் வகை கொசுக்களால் பரப்பப்படும்.
- மூளைக்காச்சல் (encephalitis) – க்யூலக்ஸ் டர்சாலிஸ் (Culex tarsalis) எனும் வகை கொசுவால் பரப்பப்படும்
- டெங்குக் காச்சல் (Dengue fever) – Aedes இனத்தைச் சேர்ந்த, பொதுவாக ஏடிஸ் எகிப்தீ (Aedes Aegypti) எனும் வகை கொசுவால் பரப்பப்படும்.
- யானைக்கால் நோய் (Filaria) – க்யூலக்ஸ் குயின்கிஃபேசியேடஸ் (Culex quinquefasciatus) எனும் வகை நுளம்பால் பரப்பப்படும்
- மஞ்சள் காய்ச்சல்
- சில வைரசு காய்ச்சல்கள் மற்றும்
- சிகா வைரசு நோய்.
கட்டுப்படுத்தும் முறைகள்
[தொகு]- நீர் வெளியே தேங்காத வாறு பார்த்துக் கொள்ளுதல்
- கதவு, சன்னல் திரைச்சீலைகள் அமைத்தல்
- கொசுவலைகளைப் பயன்படுத்தல்
- உயிரியக் கட்டுப்படுத்திகள் -
- மீன்கள்
- பூஞ்சைகள்
- தட்டான் இளவுயிரிகள்
- பல்லிகள்
- மலட்டு ஆண் கொசுக்களைப் பெருக்கல்
- நிறப்புரி இடமாற்று
- மரபணு மாற்றம் செய்தல்
கொசு விரட்டிகள்
[தொகு]- பைரித்ரம்
- பைகார்டின்
- யூகலிப்டஸ் எண்ணெய்
- டை-மிதைல் தாலேட்,
- டை-மிதைல் கார்பேட்,
- மின் பூச்சிவிரட்டிகள்
- கேளா மிகையொலி
- மின்விளக்குப்பொறிகள்
கடித்தல், சிகிச்சைகள்
[தொகு]கொசுக்கடித்தவுடன் மனித உடலின் நோயெதிர்ப்பாற்றல் கொசுவின் உமிழ் நீரிலிருந்து வெளிவரும் IgG, IgE உடன் இணைந்து நோயெதிர்ப்புத்தன்மையைத் தூண்டுகின்றன. இதனால் அரிப்பு, வீக்கம், மற்றும் தோல் சிவக்கிறது. சில கொசுக்கடிகள் உடனேயும், சில மணித்துளிகளிலும், சில நாட்பட்ட எதிர்வினைகளைக் காட்டுகின்றன.
சிகிச்சைகள்
[தொகு]அரிப்பு ஒவ்வாமையைத் தடுக்க அதன் தன்மைக்கேற்ப பென்ஹைட்ராமைன், பரப்புகளில் தடவ ஆன்திஸ்டாமைன், தீவிர சிகிச்சையில் கார்டிகோஸ்டீராய்டுகளான ஹிட்ரோகார்டிசோன், ட்ரைஅமிக்னாலோன் முதலிய பல மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Harbach, Ralph (2 November 2008). "Family Culicidae Meigen, 1818". Mosquito Taxonomic Inventory.
- ↑ 2.0 2.1 கே.என். ராமசந்திரன் (27 சூன் 2016). "கொசுக்களை அடியோடு ஒழிப்பது வேறு பல பிரச்சினைகளை உண்டாக்கும்". கட்டுரை. தி இந்து (தமிழ்). பார்க்கப்பட்ட நாள் 27 சூன் 2016.
- ↑ G. O. Poinar (2000). "Paleoculicis minutus (Diptera: Culicidae) n. gen., n. sp., from Cretaceous Canadian amber with a summary of described fossil mosquitoes" (PDF). Acta Geologica Hispanica 35: 119–128. http://www.geologica-acta.com/pdf/aghv3501a12.pdf. பார்த்த நாள்: 2017-06-28.
- ↑ "The earliest fossil mosquito (Diptera: Culicidae), in Mid-Cretaceous Burmese amber". Annals of the Entomological Society of America 97 (5): 882–888. 2004. doi:10.1603/0013-8746(2004)097[0882:TEFMDC]2.0.CO;2. பன்னாட்டுத் தர தொடர் எண்:0013-8746.
- ↑ "Discovery of new prehistoric mosquitoes reveal these blood-suckers have changed little in 46 million years". Smithsonian Science News. 7 January 2013. http://smithsonianscience.si.edu/2013/01/discovery-of-prehistoric-mosquito-species-reveal-these-blood-suckers-have-changed-little-in-46-million-years/. பார்த்த நாள்: 27 October 2015.
- ↑ Briggs, D.E. (2013). "A mosquito's last supper reminds us not to underestimate the fossil record". Proceedings of the National Academy of Sciences of the United States of America 110 (46): 18353–4. doi:10.1073/pnas.1319306110. பப்மெட்:24187151.
- ↑ Greenwalt, D.E.; Goreva, Y.S.; Siljeström, S.M.; Rose, T.; Harbach, R.E. (2013). "Hemoglobin-derived porphyrins preserved in a Middle Eocene blood-engorged mosquito". Proceedings of the National Academy of Sciences of the United States of America 110 (46): 18496–18500. doi:10.1073/pnas.1310885110. பப்மெட்:24127577.
- ↑ Reidenbach, K.R.; Cook, S.; Bertone, M.A.; Harbach, R.E.; Wiegmann, B.M.; Besansky, N.J. (2009). "Phylogenetic analysis and temporal diversification of mosquitoes (Diptera: Culicidae) based on nuclear genes and morphology". BMC Evolutionary Biology 9 (1): 298. doi:10.1186/1471-2148-9-298. பப்மெட்:20028549.
- ↑ "Widespread Divergence Between Incipient Anopheles gambiae Species Revealed by Whole Genome Sequences". Science 330 (6003): 512–514. 2010. doi:10.1126/science.1195755. பப்மெட்:20966253.
- ↑ "மூலக்கூறு வகைப்பாடு".
- ↑ Harbach, R.E. (2011). Mosquito Taxonomic Inventory.
- ↑ "கொசு இனப்பெருக்கம்". பார்க்கப்பட்ட நாள் 29 சூன் 2017.
வெளி இணைப்புகள்
[தொகு]- கொசு ஆராய்ச்சி குறித்த சீன வானொலிக்கட்டுரை பரணிடப்பட்டது 2007-09-29 at the வந்தவழி இயந்திரம்